குலமுறை கிளத்து படலம் - 726

bookmark

முசுகுந்தன்

726.

‘மறை மன்னும் மணிமுடியும்
   ஆரமும் வாளொடு மின்ன.
பொறை மன்னு வானவரும்
   தானவரும் பொரும் ஒரு நாள்!-
விறல் மன்னர் தொழு கழலாய்!-
   இவர் குலத்தோன். வில் பிடித்த
அறம் என்ன. ஒரு தனியே
   திரிந்து அமராபதி காத்தோன்.
  
விறல்  மன்னர்- வெற்றியையுடைய அரசர்கள்; தொழு கழலாய் -
பலரும்   வணங்குகிற  அடிகளை யுடையவனே;  பொறை  மன்னு  -
பொறுமை   மிக்க;   வானவரும்  -   தேவர்களும்;  தானவரும்  -
(பொறுமையற்ற)   அரக்கர்களும்;  பொரும்  -  (முன்பு   ஒருவரோடு
ஒருவர்)  போர்செய்த; ஒரு நாள்- ஒரு காலத்தில்; இவர் குலத்தோன்
-  இந்த மைந்தர்களது குலத்தைச் சேர்ந்தவனான  ஓர்  அரசன்; மறை
மன்னு -  வேத    விதிப்படி;     (முடிசூட்டப்பெற்று);      மணி
முடியும்     -  பொருந்திய  நவரத்தின    முடியும்;    ஆரமும்  -
மாலைகளும்;  வாளொடு  மின்ன  -  ஒளியோடு  மின்னுமாறு;  வில்
பிடித்த - கையில் வில்லேந்திய; அறம் என்ன - தருமதேவதை போல;
ஒரு  தனியே திரிந்து - தான் ஒருவனாகவே (வாளும் கையுமாக வான்
உலகு  சென்று)  சஞ்சரித்து;  அமராபதி  காத்தோன்  - (இந்திரனது)
அமராவதி நகரத்தைக் காத்து நின்றான் (முசுகுந்தன்).  

முசுகுந்தன்:     வானுலகில் அசுரர்கள் தேவர்களோடு போர் செய்து
அவர்களைத்   துரத்தினர்;   இந்திரன்    முதலான  தேவர்கள்  இந்த
அரசனை அடைந்து உதவ  வேண்டினர். அதனைக்  கேட்ட  மன்னவன்
வான்  சென்று  அசுரர்களைக்  கொன்று  முருகன் சேனைத்தலைவனாக
வருகின்ற வரையிலும்  வானுலகைக்   காத்திருந்தான். வில்பிடித்த அறம்
- இல் பொருள் உவமை.                                      6