கார்முகப் படலம் - 814

bookmark

சனகன் கூறிய மொழி

814.    

‘உரை செய் - எம் பெரும!
   உன் புதல்வன் வேள்விதான்.
விரைவின். இன்று. ஒரு பகல்
   முடித்தல் வேட்கையோ?
முரசு எறிந்து அதிர் கழல்
   முழங்கு தானை அவ்
அரசையும். இவ் வழி.
   அழைத்தல் வேட்கையோ?
 
எம்  பெரும- எம்  பெருமானே!  உன்   புதல்வன் - உன்னால்
அழைத்துவரப்   பெற்ற  மைந்தனது;  வேள்விதான் - திருமணமானது;
விரைவின் -  தாமதம்  இல்லாமல்;  இன்று  ஒரு  பகல் - இன்றைய
தினமே;  முடித்தல்  வேட்கையோ  - நிறைவேற்ற வேண்டும் என்பது
விருப்பமா?  (அல்லது);  முரசு எறிந்து - மணமுரசை எங்கும் முழக்கி;
அதிர்கழல்  -  அதிர்கின்ற வீரக்  கழலையும்;  முழங்கு  தானை  -
ஆரவாரம் மிக்க படைகளையுமுடைய; அவ் அரசையும் - அத்   தசரத
மன்னனையும்;   இவ்வழி   -   இந்த  நகரத்துக்கு;  அழைத்தல்  -
வரவழைத்து  (திருமணத்தை)   நடத்துதல்;  வேட்கையோ  -  உமக்கு
விருப்பமா?;  உரை  செய்  -  (இவ்   விரண்டினுள்)  எது  விருப்பம்
என்பதைச்   சிந்தித்துச்    சொல்க   (என்று    சனகன்   கோசிகனை
வினவினான்.)                                              65