கார்முகப் படலம் - 815
முனிவன் மொழிந்தபடியே சனகன் தயரதனுக்குத் தூது விடுத்தல்
815.
மல் வலான் அவ் உரை பகர. மா. தவன்.
‘ஒல்லையில் அவனும் வந்துறுதல். நன்று’ என.
எல்லை இல் உவகையான். ‘இயைந்தவாறு எலாம்
சொல்லுக’ என்று. ஓலையும் தூதும் போக்கினான்
மல் வலான்- மற்போரில் வல்ல சனக மன்னன்; அவ் உரை பகர
- அந்த மொழிகளைச் சொல்ல; மாதவன் - விசுவாமித்திரன்;
ஒல்லையில் அவனும் - விரைவில் அத் தசரதனும்; வந்து உறுதல்-
இங்கு வந்து சேருதல்; நன்று என - நலமாகும் என்று தெரிவிக்கவே;
எல்லையில் உவகையான் - எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட சனகன்;
இயைந்த ஆறு எலாம் - இங்கே நடந்த செய்திகளையெல்லாம்;
சொல்லுக என்று - (தசரத மன்னனிடம்) சொல்லுக என்று கூறி;
ஓலையும் தூதும்- திருமண ஓலையையும் தூதுவரையும்; போக்கினான்
- (அயோத்திக்கு) அனுப்பி வைத்தான்.
திருமணத்தை நாளோட்டாமல் விரைவில் செய்யவேண்டு மென்பது
முறையாகும். ஆயினும். பெற்றோரின் அனுமதியில்லாமல்
திருமணத்தை நடத்துவது முறையன்று என்று கருதிய விசுவாமித்திரன்
‘ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று’ என்றான். 66
