கார்முகப் படலம் - 813
சனகன் கோசிகனை நோக்கிக் கூறத் தொடங்குதல்
சனகன் உவந்து கோசிகனிடம் திருமணம் குறித்து வினாவுதல்
813.
ஆசையுற்று அயர்பவள் அன்னள் ஆயினள்;
பாசடைக் கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி. அக்
கோசிகற்கு ஒரு மொழி. சனகன் கூறுவான்;
ஆசை உற்று- காதல் பெருகி; அயர்பவள் - தளர்பவளான சீதை;
அன்னள் ஆயினள் - அவ்வாறான நிலையில் இருந்தாள் (அவ்வாறு
அது இருக்க); சனகன் - சனக மன்னன்; பாசு அடை - பசுமையான
இலைகளையுடைய; கமலத்தோன் - தாமரையில் தங்கும் பிரமன்;
படைத்த வில் இறும் - படைத்த வில் இற்று வீழ்ந்த; ஓசையின்-
ஓசையைக் கேட்டதால்; பெரியதோர் உவகை - மிக ஒப்பற்ற
மகிழ்ச்சியடைந்து; அக் கோசிகற்கு -அந்த விசுவாமித்திரனுக்கு; ஒரு
மொழி கூறுவான் - ஒரு வார்த்தை சொல்லலானான்.
வில்லை வளைத்தல் என்பது நடைபெறுமா என்று ஏங்கிக்
கொண்டிருந்த சனகன் வில் இறுத்த ஓசை கேட்டும் பேருவகை
கொண்டான் என்பது. 64
