கார்முகப் படலம் - 808
808.
‘மரா மரம் இவை என
வலிய தோளினான்;
“அரா-அணை அமலன்” என்று
அயிர்க்கும் ஆற்றலான்;
‘இராமன்’ என்பது பெயர்;
இளைய கோவொடும்.
பராவ அரு முனியொடும்.
பதி வந்து எய்தினான்;
(அந்தக் குமரன்) இவை மராமரம் என- மராமரம் என்னும்படி;
வலிய தோளினான் - வன்மையான தோள்களையுடையவன்; அரா
அணை அமலன் என்று - ஆதி சேடனாகிய படுக்கையில் பள்ளி
கொள்ளும் திருமால்தான் அவதரித்தானோ என்று; அயிர்க்கும்
ஆற்றலான் - ஐயுறக் கூடிய ஆற்றல் படைத்தவன்; பெயர் -
(அவனுக்கு) அவனது பெயர்; இராமன் என்பது - இராமன் என்பது
(அவன்); இளைய கோவொடும் - தம்பியான அரச குமாரனோடும்;
பராவ அரு முனியொடும் - அளவிட்டுப் புகழ்வதற்கு அரிய
முனிவனோடும்; பதி - (நம்) நகரை; வந்து எய்தினான் - வந்து
சேர்ந்தான்.
தசரதன் மைந்தனான இராமன் தம்பியோடும் விசுவாமித்திரனுடனும்
மிதிலை நகர்க்கு வந்தான். 59
