கார்முகப் படலம் - 809
809.
‘ “பூண் இயல் மொய்ம்பினன்.
புனிதன் எய்த வில்
காணிய வந்தனன்”
என்ன. காவலன்
ஆணையின் அடைந்த வில்
அதனை. ஆண்தகை.
நாண் இனிது ஏற்றினான்;
நடுங்கிற்று உம்பரே!
பூண் இயல் - வாகு வலயங்களை அணிந்த; மொய்ம்பினன் -
தோள்களையுடைய அக்குமாரன்; புனிதன் எய்த வில் - புனிதனான
சிவன் கைக்கொண்டு எய்த வில்லை; காணிய வந்தனன் - காணும்
பொருட்டு வந்துள்ளான்; என்ன - என்று (விசுவாமித்திரன்) சொல்ல;
காவலன் ஆணையின் - சனக ராசனின் கட்டளையால்; அடைந்த -
அங்கு வந்து சேர்ந்த; வில் அதனை - அந்த வில்லை (வளைத்து);
ஆண் தகை - ஆண்மையுள்ளவனான அக்குமாரன்; இனிது நாண்
ஏற்றினான் - மிக எளிதாக நாணேற்றினான்; உம்பர் நடுங்கிற்று -
வானுலகும் நடுங்கியது.
மொய்ம்பு - வலிமை வலிமை;கொண்ட தோளுக்காயிற்று. ‘பூந்தாது
மொய்ம்பினவாக’- கலித். 88. 60
