கார்முகப் படலம் - 798
798.
‘பஞ்சு அரங்கு தீயின் ஆவி
பற்ற. நீடு கொற்ற வில்
வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க.
வெய்ய காமன் எய்யவே.
சஞ்சலம் கலந்தபோது.
தையலாரை. உய்ய வந்து.
“அஞ்சல்! அஞ்சல்!” என்கிலாத
ஆண்மை என்ன ஆண்மையே?
வெய்ய காமன் - கொடுமையுள்ள மன்மதன்; நீடு கொற்ற வில் -
நீண்ட வெற்றியுடைய வில்லினால்; வெம் சரங்கள் - கொடிய
அம்புகளை; பஞ்சு அரங்கு தீயின் - பஞ்சை அழிக்கும் நெருப்புப்
போல; ஆவி பற்ற - என்னுயிரைப் பற்றி நிற்கவும்; நெஞ்சு அரங்க -
(அதனால்) என் மனம் சிதையுமாறு; எய்ய - பிரயோகித்தலால்;
சஞ்சலம் கலந்த- துன்பம் வந்து கலங்கும்; போது - இப்போது; உய்ய
வந்து - (நான்) உயிர் பிழைக்கும்படி என் அருகே வந்து; தையலாரை
- (ஆதரவற்ற) பெண்களை; அஞ்சல் அஞ்சல் என்கிலாத -
அஞ்சாதீர். அஞ்சாதீர் என்று கூறி அபயம் அளிக்காத; ஆண்மை -
ஆண்மை; என்ன ஆண்மையோ - எத்தகைய ஆண்மையோ?
வருந்தும் பெண்களை அணுகி அஞ்சல் என்று அபயம் அளிப்பதே
ஆண்மைக்கு அழகு. ஆனால். அப்படிச் செய்யாத இப்பிரானது
ஆண்மை என்ன ஆண்மை என்று வெறுப்பினால் இயற்பழிக்கின்றாள்
சீதை. 49
