கார்முகப் படலம் - 799

bookmark

799.    

‘இளைக்கலாத கொங்கைகாள்!
   எழுந்து விம்மி என் செய்வீர்?
முளைக்கலா மதிக்கொழுந்து
   போலும் வாள் முகத்தினான்.
வளைக்கலாத விற் கையாளி.
   வள்ளல். மார்பின் உள்ளுறத்
திளைக்கல் ஆகும்ஆகில். ஆன
   செய் தவங்கள் செய்ம்மினே!
 
இளைக்கலாத    - இளைக்காது பருத்து வரும்; கொங்கைகாள் -
தனங்களே;  எழுந்து  விம்மி  - (நீங்கள்) மேன்மேல் எழுந்து பருத்து
வருதலால்;  என்  செய்வீர் - என்ன காரியத்தைச் சாதித்து  விடுவீர்?;
முளைக்கலா -  வானில் தோன்றாத;  மதிக்  கொழுந்து  போலும் -
என்றும்   ஒரு  தன்மைத்  தாயுள்ள  சந்திரனைப்   போன்ற;   வாள்
முகத்தினான் - ஒளியுள்ள முகத்தை யுடையவனும்; வளைக்கலாத வில்
-  (யாராலும்)  வளைக்கமுடியாதபடி  அரிதான  வில்லை;  கை  ஆளி
வள்ளல்  -  கையில்  ஏந்தியவனுமாகிய  அருள்மிக்க    அவனுடைய;
மார்பினுள்-  திருமார்பை;  உறத் திளைக்கலாகும் ஆகில் -  இறுகத்
தழுவக் கூடிய வழி ஏற்படுமாயின்; ஆன செய்தவங்கள் - அதற்கேற்ப
செய்யத் தக்க தவங்களை; செய்ம்மினே - செய்யுங்கள்.

‘கொங்கை    முளைத்தெழுவதன் பயன் அவனது மார்பைத் தழுவிக்
கொள்ளுதலேயாகும்.  அந்த  நிலை கிடைப்பதற்கான வழி   இருந்தால்
அதைச்  செய்யுங்கள்.  அதைவிட்டு    நீங்கள்  எழுந்து  விம்முவதால்
பயன் எதுவுமில்லை’ என்று சீதை கூறுகிறாள்.                    50