கார்முகப் படலம் - 791
நகரமாந்தர்கூற்று (791-792)
மிதிலை நகர மக்களின் உவகை மொழிகள்
791.
‘தயரதன் புதல்வன்’ என்பார்;
‘தாமரைக் கண்ணன்’ என்பார்;
‘புயல் இவன் மேனி’ என்பார்;
‘பூவையே பொருவும்’ என்பார்;
‘மயல் உடைத்து உலகம்’ என்பார்;
‘மானிடன் அல்லன்’ என்பார்;
‘கயல் பொரு கடலுள் வைகும்
கடவுளே காணும்’ என்பார்.
(அந்நகர மக்களில் சிலர்); தயரதன் புதல்வன் என்பார் - (இவன்)
தயரதன் திருமகன் என்று கூறுவார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்
- (சிலர் இவன்) செந்தாமரைக் கண்ணனான திருமாலே என்று
சொல்வார்கள்; இவன் மேனி - (சிலர்) இவனது மேனியின் நிறம்;
புயல் என்பார் - கருமேகம் என்பார்கள்; பூவையும் பொருவும் -
(தவிர) காயாம் பூவையும் ஒத்துள்ளது; என்பார் - என்பார்கள் (சிலர்);
மானிடன் அல்லன் - (எவ்வாறாயினும் இவன்) மானுடன் அல்லன்;
என்பார் - என்று கூறுவார்கள் (சிலர்); கயல் பொரு கடலுள்-
(பின்னை இவன் யாரென்றால்) கயல்மீன்களையுடைய பாற்கடலில்;
வைகும் கடவுளே - தங்கியுள்ள திருமாலே ஆவான்; என்பர் - என்று
சொல்வார்கள்; மயல் உடைத்து உலகம் - இந்த உலகத்தின் இயல்பு
மயக்கம் உடையது; என்பார் - என்று கூறுவார்கள் (சிலர்) (இவ்வாறு
மக்கள் பலபடி கூறினர்).
பூவையும் - இறந்தது தழீஇய எச்ச உம்மை. 42
