கார்முகப் படலம் - 792
792.
‘நம்பியைக் காண நங்கைக்கு
ஆயிரம் நயனம் வேண்டும்;
கொம்பினைக் காணும்தோறும்.
குரிசிற்கும் அன்னதே ஆம்;
தம்பியைக் காண்மின்!’ என்பார்;
‘தவம் உடைத்து உலகம்’ என்பார்;
‘இம்பர். இந் நகரில் தந்த
முனிவனை இறைஞ்சும்’ என்பார்.
நம்பியைக் காண- (மற்றும் சிலர்) இராமனது வடிவழகைக்
காண்பதற்கு; நங்கைக்கு ஆயிரம் நயனம் - சீதைக்குக் கண்கள்
ஆயிரம்; வேண்டும் - வேண்டும் (என்று கூறுவார்); கொம்பினை -
பூங்கொம்பு போன்ற இவளை (சீதையை); காணும்தோறும் -
பார்க்கும்தோறும் (புதிய புதிய வடிவழகே புலப்படுவதால்); குரிசிற்
கும் - இப் பெருமானாகிய இராமனுக்கும்; அன்னதே - (ஆயிரம்
கண்கள் வேண்டும் என்பது) அத்தன்மையதே; தம்பியைக் காண்மின்
- (தமையன் இருக்கட்டும்) அவன் தம்பியான இவன் வடிவழகைப்
பாருங்கள்; என்பார் - என்று சொல்வார்; உலகம் தவம் உடைத்து -
(இப்படிப்பட்ட அழகுள்ளவர்களைப் பெற்றதால்) இந்த நிலவுலகம்
தவம் செய்ததாயிற்று; என்பார் - என்று சொல்லுவர் (சிலர்); இம்பர்
இந்நகரில் - (மற்றும் சிலர்) உள்ள இந்த உலகத்தில் மிதிலை நகரில்;
தந்த முனிவனை - இம் மைந்தர்களை அழைத்துவந்த விசுவாமித்திர
முனிவனை; இறைஞ்சும் என்பார் - (எல்லாரும்) வணங்குங்கள்
என்றுசொல்வார்கள்.
கொம்பினைப் பார்க்கும்தோறும் இமைத்தல் முதலிய
இடையீடுகளால் பார்வை தடைப்படும். அவ்வாறு விட்டுவிட்டுப்
பார்க்குமிடத்து முன்னிலும் புதிய பொலிவு புலப்படுவதால் ஆயிரம்
ஆயிரம் கண்கள் இந்த இராமனுக்கும் வேண்டும் என்றவாறு.
‘காணுந்தோறும்’ என்றமையால் சீதையின் ஒவ்வோர் உறுப்பும்
தனியான அழகு படைத்துள்ளது என்பது பெறப்படும். அழகை
பருகுவோர்க்கு இமைத்தலும் தடையாகும். பெரியவனை
மாயவனை.......கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே -
ஆய்ச்சியர் படர் - 2. 43
