கார்முகப் படலம் - 789
789.
வயிரியர் மதுர கீதம்.
மங்கையர் அமுத கீதம்.
செயிரியர் மகர யாழின்
தேம் பிழி தெய்வ கீதம்.
பயிர் கிளை வேயின் கீதம்.
என்று இவை பருகி. விண்ணோர்
உயிருடை உடம்பும் எல்லாம்
ஓவியம் ஒப்ப நின்றார்.
வயிரியர் - கூத்தர்களின்; மதுர கீதம் - இனிய பாடல்களும்;
மங்கையர் அமுதகீதம் - மகளிரின் அமுதப் பாடல்களும்; செயிரியர்
- யாழினை மீட்டும் பாணர்; மகரயாழின் தேன்பிழி - மகரயாழிலே
தோன்றும் தேன் பிழிந்தாற் போன்ற; தெய்வ கீதம் - பாடும்
தெய்வத்தன்மையுள்ள பாடல்களும்; வேயின் பயிர்கிளை- புல்லாங்
குழலிலிருந்து ஏழிசை அடிப்படையில் தோன்றும் பல்வேறு ராகங்கள்;
கீதம் - ஒலிக்கவும்; என்ற இவை - என்ற இவற்றை; பருகி - செவியிற்
கேட்டு; விண்ணோர் - தேவர்கள்; உயிர்உடை - உயிருள்ள; உடம்பு
எல்லாமும் - உடல் எல்லாம்; ஓவியம் ஒப்ப நின்றார் - சித்திரம்
போல (அசைவற்று) நின்றார்கள்.
சீதையின் திருமணம் விரைவில் நிகழும் என்ற மகிழ்ச்சியால்
பாணர் முதலியோரின் கீதங்கள் நிகழ்ந்தன; அப் பாடல் இனிமையில்
ஈடுபட்டு விண்ணவர் சித்திரம்போல நின்றனர் என்பது. 40
