கார்முகப் படலம் - 785
தேவர்களின் மகிழ்ச்சி
வானகத்தார் வாழ்த்தும் மண்ணகத்தார் மகிழ்ச்சியும்
785.
பூ மழை சொரிந்தார் விண்ணோர்;
பொன் மழை பொழிந்த மேகம்;
பாம மா கடல்கள் எல்லாம்
பல் மணி தூவி ஆர்த்த;
கோ முனிக் கணங்கள் எல்லாம்
கூறின ஆசி; - ‘கொற்ற
நாம வேல் சனகற்கு. இன்று.
நல்வினை பயந்தது’ என்னா.
கொற்றம் - வெற்றியையும்; நாமவேல் - (பகைவர்க்கு) அச்சந்
தரும் வேற்படையையும் உடைய; சனகற்கு - சனகமன்னனுக்கு; இன்று
- இன்றுதான்; நல்வினை - முற்பிறப்பில் செய்த நல்வினை; பயந்தது -
பயனை அளித்தது; என்னா - என்று எண்ணி; விண்ணோர் -
(அதனால்) தேவர்கள்; பூமழை சொரிந்தார் - மலர்மழை
பொழிந்தார்கள்; மேகம் - வானமானது; பொன்மழை - பொன்மாரி;
பொழிந்தது - பொழிந்தது; பாம மா கடல்கள் எல்லாம் - பரந்துள்ள
கடல்கள் யாவும்; பல்மணி தூவி - பலவகை மணிகளைச் சிதறி;
ஆர்த்த - ஆரவாரித்தன; கோமுனிக் கணங்கள் - சிறந்த முனிவர்
கூட்டங்கள்; எல்லாம் ஆசி கூறின - யாவும் வாழ்த்து மொழிகளைக்
கூறின.
பாமம் - பரப்பு; ஒளி என்ற பொருளும் உண்டு. வில்லொடித்த
ஓசை கேட்டு முதலில் துணுக்குற்றாராயினும் பின்னர் இராமன்
சிவதனுசை முறித்த ஓசையே என அறிந்து பூமழை பொழிதல்
முதலியவற்றைச் செய்தனர் என்பது. 36
