கார்முகப் படலம் - 786
நகர மாந்தரின் மகிழ்ச்சி (786-790)
786.
மாலையும். இழையும். சாந்தும்.
சுண்ணமும். வாச நெய்யும்.
வேலை வெண் முத்தும். பொன்னும்
காசும். நுண் துகிலும். வீசி.
பால் வளை. வயிர்கள். ஆர்ப்ப;
பல் இயம் துவைப்ப; முந்நீர்
ஓல் கிளர்ந்து உவா உற்றென்ன.
ஒலி நகர் கிளர்ந்தது அன்றே!
நகர் - அந்த மிதிலை மாநகர்; பால்வளை - வெண் சங்குகளும்;
வயிர்கள் ஆர்ப்ப- ஊது கொம்புகளும் முழங்க; பல் இயம் துவைப்ப
- பலவகை வாத்தியங்களும் ஒலிக்க; மாலையும் -
மலர்மாலைகளையும்; இழையும் - அணிகலன்களையும்; சாந்தும் -
சந்தனக் குழம்பையும்; சுண்ணமும் - நறுமணப் பொடியும்; வாச
நெய்யும் - மணமுள்ள தைலவகையும்; வேலை வெண்முத்தும் -
கடலின் வெண் முத்தையும்; பொன்னும் - பொன்னையும்; காசும் -
இரத்தினங்களையும்; நுண்துகிலும் - மெல்லிய ஆடைகளையும்; வீசி-
(ஒருவர்க்கொருவர்) வழங்கி; உவா உற்று - பருவகாலம்
வந்ததால்; முந்நீர் ஓல் - கடல் ஆரவாரத்தால்; கிளர்ந்து என்ன -
கிளர்ந்தது போல; ஒலி கிளர்ந்தது - ஒலி மிகுதி யாயிற்று.
இராமன் வில்லை முறித்தமையால் இனிச் சீதையின் திருமணம்
நடைபெறப் போகின்றது என்ற மகிழ்ச்சியால் மிதிலை நகரத்தவர்
மாலை முதலியவற்றை வீசிப் பேராரவாரம் செய்தனர் என்பது.
பௌர்ணமி நாளில் கடல் பொங்கி ஒலித்தல் வில் முறிபட்ட தினத்தில்
நகரின் முழக்கத்துக்கு உவமையாகும். ஓல் - ஓலம் - கடைக்குறை. 37
