கார்முகப் படலம் - 783
வில் ஒடிதல்
783.
தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.
தடுத்து இமையால்- கண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி;
இருந்தவர் யாரும் - (நிகழ்வதை) பார்த்து நின்ற அவையோர்
யாவரும்; தாளில் மடுத்ததும் - (இராமன்) தன் திருவடியால்
அவ்வில்லின் முனையை மிதித்ததையும்; நாண் துதி வைத்ததும் -
(அதை வளைத்து) மற்ற முனையில் நாண் ஏற்றியதையும்; கடுப்பினில்
- (செயலின்) வேகத்தால்; நோக்கார் - காணமுடியாதவராயினர்;
அறிந்திலர் - அன்றியும் மனத்தாலும் இன்னது தான்
நிகழும் என்று கருதவும் இயலாதவர் ஆகினர்; கையால் எடுத்தது -
(ஆயினும்) இராமன் தன் கையால் (அவ் வில்லை) எடுத்ததை;
கண்டனர் - பார்த்தார்கள்; இற்றது கேட்டார்- (அந்தவில்) முறிந்து
விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.
கண் இமை கொட்டினால் இராமன் வில்லையெடுத்து
நாணேற்றுவதைக் காணாமற்போய் விடுவோம் என்று கண் கொட்டாது
பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும். அது முறிந்த
ஓசையையும் கேட்டனரே அல்லாமல் அதை நாணேற்றியதைக் காண
முடியாதவராயினர் என்பது. இற்றது - இறுதலால் தோன்றிய ஒலி 34
