கார்முகப் படலம் - 784
வில் முறிந்ததால் எழுந்த ஒலி
வில் இற்ற ஓசையால் மூவுலகத்தும் தோன்றிய அச்சம்
784.
‘ஆரிடைப் புகுதும் நாம்?’ என்று.
அமரர்கள். கமலத்தோன்தன்
பேருடை அண்ட கோளம்
பிளந்தது’ என்று ஏங்கி. நைந்தார்;
பாரிடை உற்ற தன்மை
பகர்வது என்? பாரைத் தாங்கி.
வேரெனக் கிடந்த நாகம்
இடி என வெருவிற்று அன்றே!
அமரர்கள் - (வில் முறிந்த ஓசையைக் கேட்ட) தேவர்கள்;
கமலத்தோன்தன் - பிரமன் படைத்த; பேருடை அண்ட கோளம்-
பெரிய அண்ட கோளமே; பிளந்தது என்று - பிளந்து விட்டது என்று
கருதி; ஏங்கி - ஏக்கம் கொண்டு; ஆர் இடை - இனி எவரிடத்தில்;
நாம் புகுதும் என்று - நாம் அடைக்கலம் புகுவோம் என்று; நைந்தார்
- வருந்தினார்கள்; பார் இடை உற்ற - (விண்ணுலகமே இவ்வாறாயின்)
இம் மண்ணுலகில் நிகழ்ந்த; தன்மை பகர்வது என் - தன்மை பற்றி
நாம் சொல்ல வேண்டுவது என்ன உள்ளது?; பாரைத் தாங்கி -
பூமியின் கீழ் அதைத் தாங்கிக் கொண்டு; வேர் எனக் கிடந்த-
இந்தப் பூமியின் வேர்போலக் கிடக்கின்ற; நாகம் - ஆதிசேடன்
என்னும் நாகமும்; இடி என - இடி (தன்மேல்) விழுகின்றதென்று;
வெருவிற்று - கருதி அஞ்சுவதாயிற்று.
அவ் வில் இற்றதனால் தோன்றிய ஓசை விண். மண். பாதலம்
என்னும் மூவுலகத்தார்க்கும் அச்சம் விளைத்தது என்பது.
கமலத்தோன்தன் பேருடையண்டம் - பிரமாண்டம். 35
