கருவேலன்
தாவர இயல் பெயர்: Acacia nilotica/ Acacia arabica
இதன் மறு பெயர்கள்: கருவேலம் மரம் (சீமை கருவேல மரம் என்பது வேறு. அது விளை நிலங்களை நாசப்படுத்தும் நாச மரம் ஆகும்)
வளரும் இடங்கள்: இது ஆபிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்டது. இது தவிர எகிப்திலும் இவ்வகை மரத்தைக் காணலாம்.
பயன் தரும் பகுதிகள்: இலைகள், பட்டை, பிசின், கனி.
பொதுவான தகவல்கள் : கருவேலமரம் அல்லது கருவமரம் என்பது காடுகளில் வளரும் முள்மரம். (Acacia nilotica) இது ஆபிரிக்கா மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தை தாயகமாகக் கொண்டது. கருவேல மரம் தமிழகத்தில் பயனுள்ள மற்றும் பாரம்பரியம் மிக்க மரங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேல மரம் (Acacia nilotica), சீமையில் (வெளியில்,பெயர் காரணமும் அதுவே) இருந்து அறிமுகப் படுத்திய சீமை கருவேலமரத்தை (Prosopis juliflora) ஒத்து இருந்ததாலும் அடிப்படையில் இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.
கருவேலம் பயன்பாடுகள்:-
இதன் இலைகளையும், நெற்றுகளையும் வெள்ளாடுகள் விரும்பி உண்ணும்.
இதன் உலர்ந்த நெற்றுகளை ஆட்டினால் அவற்றிலுள்ள விதைகள் கலகல என ஒலிக்கும். சிறுமியர் இதன் நெற்றுகளைக் கட்டிச் சலங்கை போல் கால்களில் கட்டிக்கொண்டு நடந்து மகிழ்வர்.
இந்த மரத்தில் ஒழுகும் கோந்து (gum) எழுதுதாள்களை (paper) வன்மையாக ஒட்ட உதவும்.
கருவக்காய்களைக் கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து வடித்துத் தேங்காய் உடைத்த கொட்டாங்குச்சிகளில் ஊற வைப்பர். ஊறிய நீரை வெய்யிலில் காய வைப்பர். அதன் சாறு கெட்டியானதும் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டுக்குப் பயன்படுத்துவர். நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றிக் குழைந்தும் பொட்டாகப் பயன்படுத்துவர். இந்தப் பொட்டு நிழலாடும். அதாவது அந்தப் பொட்டுக்குள் அடுத்தவர் தன் முகத்தைப் பார்க்கலாம்.
இதைப் போலத் தமிழர் பயன்படுத்திய மற்றொரு பொட்டு வேங்கைப்பொட்டு. இது செங்கரு நிறம் கொண்டது. கருவம் பொட்டு கருகரு நிறம் கொண்டது.
கருவங்குச்சிகளை ஒடித்துப் பல் துலக்கப் பயன்படுத்துவர். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழி.
கருவமரம் வயிரம் பாய்ந்திருந்தாலும் அதனை வீடுகளுக்குப் பயன்படுத்தக்கூடாது எனக் கூறுவர். காரணம் காயக்காய இது முறுக்கிக்கொள்ளும்.
கருவேல மரத்தின் மருத்துவப் பயன்கள்:-
* கருவேலன் பிசினைப் பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட்டால், சீதபேதி அதிசார பேதி போன்ற அனைத்து வகை பேதிகளும் நீங்கும். அத்துடன் உடலில் இருந்து அதிகமான அளவு நீர் போவதையும் இது நிவர்த்தி செய்யும்.
* கருவேலன் பட்டையைத் துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் காயவைத்து 30 கிராம் கிராம்பு 6 கிராம் மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை பல் துலக்கிவர பல்வலி குணமாகும்.
* நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் கருவேலன் பிசினை எடுத்து நன்றாகக் காய வைக்கவும். அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகக் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனைப் பாலில் போட்டு நாள் தோறும் சாப்பிட்டு வர குணம் கிடைக்கும்.
* வெட்டுக் காயம் ஆற கருவேலன் துணை செய்கிறது. வெட்டுக் காயத்தை சுத்தம் செய்து விட்டு கருவேலன் இலையை அம்மியில் வைத்து மை போல அரைத்து காயத்தின் மேல் வைத்துக் கட்டி விட்டால் புண் ஆறிவிடும்.
* முகம், பல் நோய்கள், இரத்த நோய்கள், இரத்த தோஷம், நஞ்சு, கபம், அரிப்பு, கிருமி நோய், குஷ்டம் ஆகிய அனைத்தையும் கருவேலன் போக்க வல்லது.
* கருவேல வேர் இரத்தக்கடுப்பு, அக்கினி மந்தம், மகாவாதம், கரப்பான், அதிசாரம் ஆகிய அனைத்தையும் போக்கும்.
* கருவேலன் பட்டைகளை உடைத்து போட்டுக் கஷாயம் வைத்து வாய்க் கொப்பளித்து வந்தால், வாய் ரணம், ஈறுகளின் வீக்கம் என அனைத்தும் எளிதில் குணம் அடைந்து விடும்.
* கருவேலன் பட்டையைத் தூள் செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தீப்புண்களுக்குப் போட்டு வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
* கருவேலன் பிசின் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனுடன் கடுக்காய்த் தோல் சேர்த்து இடித்து, சல்லடையில் சலித்து அரை தேக்கரண்டி அளவு தேனுடன் தினமும் இருவேளை சாப்பிட தாது கெட்டிப்பட்டுவிடும்.
* கருவேலன் பிசினை துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட் கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தி அடையும். அத்துடன் பேடித் தன்மையும் அழியும்.
* கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை செய்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து சுத்தமான துணியினால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விட வேண்டும். இந்த விதமாக மூன்று நாட்கள் செய்ய கண்வலி குணமாகும்.
