கண்ணம்மா என் காதலி - 5

கண்ணம்மா என் காதலி - 5

bookmark


செஞ்சுருட்டி - ஆதிதாளம்
சிருங்கார ரஸம்

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
  செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
  பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
  மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
  பாவை தெரியு தடீ! 1

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
  வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
  வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! - இந்த வையகம்
  மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
  நரகத் துழலுவதோ? 2

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
  காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
  அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
  கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற் காகவோ
  நாணிக் குலைந்திடுவாள். 3

கூடிப் பிரியாமலே - ஓரி ராவெலாம்
  கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
  ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
  நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
  பண்ணிய தில்லை யடி! 4