மந்தரை சூழ்ச்சிப் படலம் - 1515
1515.
“ஒர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை
போர் இல் தொல் விதி பெற்று உளது” என்று அரோ,
தீர்வு இல் அன்பு செலுத்தலின், செவ்வியோர்
ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே.
‘ஓர்வின் - ஆய்வினை உடைய; நல்வினை ஊற்றத்தினார் - நல்ல
தொழிலின்கண் எப்பொழுதும் முயலும் முயற்சியை உடைய முனிவர்களது;
உரை - மொழியை; பேர்வுஇல் தொல்விதி- மாறு படுதல் இல்லாத
பழைய விதி; பெற்று உளது - அடைந்து (அவ்வுரைவழி) நடக்கின்றது;
என்று - என்று கருதி; தீர்வுஇல் அன்பு செலுத்தலின் - அவர்களிடத்து
நீங்காதஅன்பைச் செலுத்துகின்ற காரணத்தால்; செல்வியோர் ஆர்வம் -
நன்மையுடைய அப்பெரியோர்தம்பால் செலுத்தும் விருப்பம்; மன்னவற்கு -
அரசனுக்கு; ஆயுதம் ஆவது - படைக்கலம்ஆகும்.’
முன்னர் (1416) ‘அவர் ஏவ நிற்கும் விதி’ என்றதும் காண்க.
முனிவர்க்கு ஊழும் கட்டுப்பட்டு நடக்கும். அதனால் அவர்களது
பிரியத்தைக் சம்பாதித்துக்கொள்ளுதல் மன்னவற்குப் பெரும்படையாகும்.
‘அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும், நண்பு என்னும் நாடாச் சிறப்பு”
என்ற குறளைப்(குறள் - 74) பின்னிரண்டு வரிகளுடன் ஒப்பிடுக. ‘அரோ’
‘ஏ’ ஈற்றசை. 28
