கடிமணப் படலம் - 1345
பரதன் முதலிய மூவர்க்கும் திருமணம்.
1345.
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன். ‘எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்’ எனத் தமரோடு குறித்தான்.*
எள்ளல் இல் கொற்றவன்-பழிப்பில்லாத வெற்றிகளையே கொண்ட
சனகன்; எம்பி அளித்த அள்ளல் மலர்திரு அன்னவர்தம்மை -
என்பின் பிறந்தவனான தம்பி (குசத்துவசன்) பெற்ற. சேற்றில் மலரும்
செந்தாமரையில் வாழும் திருமகள் அனைய மகளிரையும்; கொள்ளும்
என - மணஞ்செய்து கொள்ளுங்கள் என்று; வள்ளல் தனக்கு
இளையோர்கள் தமக்கும் - வரையாது அருளும் இராமபிரானது
தம்பியராகிய. பரத இலக்குவ. சத்துருக்கனர்க்கும்; தமரோடு குறித்தான்
- (தசரத சக்கரவர்த்தி முதலிய) உறவினர்களோடு மணம் பேசி
நிச்சயித்தான்.
சீதையை வளர்த்தபின் சனகனுக்குப்பிறந்த பெண்ஆகிய
ஊர்மிளையை இலக்குவனுக்கும். தம்பி மகளிராகிய மாண்டவியைப்
பரதனுக்கும் சுருதகீர்த்தியைச் சத்துருக்கனனுக்கும் நிச்சயித்தனர்
என்பது முதனூலால் பெறப்படும். 100
