கடிமணப் படலம் - 1346
1346.
கொய்ந் நிறை தாரன். குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன். மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர். வான் உறை நீரார்.
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார்.
கொய்ந்நிறை தாரன் - மலர்களைக்கொய்து தொடுத்து நிறைந்த
மாலைகளையணிந்த மார்பினனாகிய சனகனும்; குசத்துவசப்பேர்
நெய்ந்நிறை வேலவன் - குசத்துவசன் என்னும் பெயரையுடைய
நெய்நிறையப் பூசப்பெற்றுள்ள வேல் ஏந்திய சனகனின் தம்பியும்
(ஆகிய இருவரின்); மங்கையர் நேர்ந்தார் - மகளிர் மூவரும்
திருமணத்திற்குப் பொருந்தியவர் ஆயினர்; மைந்நிறை கண்ணியர் -
மை நிறைந்த கண்களை யுடையவரும்; வான்உறை நீரார் - வான
மகளிரின் தன்மையையுடையவரும்; மெய்ந்நிறை மூவரை - பருவம்
நிரம்பினவரும் ஆகிய அம்மூவரையும்; மூவரும் வேட்டார் - (இராம
பிரானின் தம்பியராகிய) மூவரும் மணஞ்செய்து கொண்டனர்.
மெய் - ஆகு பெயராய்ப் பருவத்தைக்குறித்தது. சத்திய
ஒழுக்கத்தையும். நிறையென்னும் பெண்மை ஒழுக்கத்தையும் கொண்ட
மகளிர் என்று “மெய்ந்நிறை மூவர்” எனுந்தொடர்க்குப் பொருள்
கொள்ளினும் அமையும். 101
