கடிமணப் படலம் - 1341
தாயரின் பெரு மகிழ்ச்சி
1341.
சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்.
‘அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?’ என்றார்;
கண்கள் களிப்ப. மனங்கள் களிப்பார்.
சங்க வளைக்குயிலைத் தழீஇ நின்றார் - (தசரதனின்
மனைவியராகிய அம்மூன்று தேவிமார்களும்) சங்கவளையல்களையணிந்த
ஒரு குயில் போன்ற சானகியை (அன்புமிகத்) தழுவி மகிழ்ந்தார்கள்;
‘அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார் பெண்கள் இனிப்பிறர்
யார் உளர்?’ - அழகிய திருக்கண்களையுடைய (நம்) இராமனுக்கு
ஏற்ற துணைவியாகத் தக்கார். பெண்களில் இவளைத்தவிர (மூவுலகிலும்)
வேறு யார் உள்ளார்கள்?’; என்று கண்கள் களிப்ப. மனங்கள்
களிப்பார் - என்று கூறி. தங்கள் கண்கள் (இவளைக்கண்டதனால்)
களிப்படைய (இவளை மருகியாகப் பெற்றதனால்) மனமும்
களிப்படைந்தவர் ஆயினர்.
மூவர்க்கும். கண் விருந்தும் மனவிருந்தும் படைத்தாள் பிராட்டி
என்பது கருத்து. குயில் - உவமையாகுபெயர். அங்கணன் அழகிய
திருக்கண்களை யுடையவனாகிய இராமன். இராமனாகிய நம்
செல்வனின் திருக்கண்களுக்கு நல்விருந்து கிட்டியுள்ளது என்பார்.
“அங்கணனுக்கு” என்றார். கண்களின் களிப்பு! மனத்துக்கு இறங்கிற்று
என்பார். “கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார்” என்றார். தாயர்
மூவர் மனநிலையும் ஒன்றாகவே இருந்ததால். மூவர் கூற்றையும் ஒரு
கூற்றாகவே உரைத்தார். தாயர்மூவரின் பேதமிலாப் பெருநிலை
சுட்டியவாறு. 96
