கடிமணப் படலம் - 1340
மணமகள் அம்மூவரையும் வணங்கல்
சீதை பணிதலும் மாமியர் மகிழ்வும்
1340.
அன்னமும். அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தனள்; சிந்தை உவந்தார்.
கன்னி. அருந்ததி. காரிகை. காணா.
‘நல் மகனுக்கு இவள் நல் அணி’ என்றார்.
அன்னமும் அன்னவர் அம்பொன் மலர்த்தாள் சென்னி
புனைந்தாள் - அன்னப்பெடை போன்ற சீதையும். அத்தேவிமார்
மூவரின் அழகிய பொன்போல் அருமையான திருவடித்தாமரை
மலர்களைத் தன் தலைக்கு அணியாகக்கொண்டு வணங்கினாள்;
சிந்தை உவந்தார் - (அப்போது அவர்கள் மூவரும்) சிந்தை
மகிழ்ந்தவர்களாகி; கன்னி அருந்ததி காரிகை காணா- கற்பழிவில்லாத
அருந்ததி போன்ற அழகிய மங்கையாகிய சானகியைப் பார்த்து;
நல்மகனுக்கு இவள் நல் அணி என்றார் -‘நம்’ சிறப்பிற்குரிய (செல்வ)
மகனுக்கு. இச்சீதை சிறப்பிற்குரிய அணிகலம் ஆவாள்’ என்றனர்.
மாமியர் மூவரும். மணமக்கள் பொருத்தம் தோன்ற. “நல் மகனுக்கு
இவள் நல் அணி” என்றார். நம் நல் மகனுக்கு இவள் நல்ல
அணிகலமாகி அழகு கூட்டுவாள் எனப் பிராட்டியின் ஏற்றம்
கூறியவாறுமாம். சீதை. இராமன் வாழ்வுக்கு அழகூட்டுவாள் என்பதாம்.
காணா - கண்டு. செய்யா என்னும் வினையெச்சம். 95
