கடிமணப் படலம் - 1338
மகிழ்ச்சி ஆரவாரம்
மங்கல ஆரவாரம்
1338.
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை.
ஆர்த்தன பேரிகள்- அப்பொழுது மங்கல பேரிகைகள் முழங்கின;
ஆர்த்தன சங்கம் - சங்க வாத்தியங்கள் முழங்கின; ஆர்த்தன
நான்மறை - நான்கு வேதங்களும் முழங்கின; ஆர்த்தனர் வானோர்-
தேவர்கள் (ஆனந்தத்தால்) முழங்கினர்; ஆர்த்தன பல்கலை - பல்
வகைக்கலைகளும் ஆர்ப்பரித்தன; ஆர்த்தன பல்லாண்டு -
பல்லாண்டு இசைகள் (எங்கும்) ஒலித்தன; ஆர்த்தன வண்டு இனம் -
(மலர் மாலைகளில் மொய்த்த) வண்டினங்களும் (இம்மகிழ்ச்சி
வெள்ளத்தில் பங்கு கொள்பவைபோல்) ஆரவாரித்தன; ஆர்த்தன
வேலை - கடல்களும் (மகிழ்ச்சியில் பங்குபெற்று) ஆர்ப்பரித்தன!
உலகுக்கு நலம் விளைக்கும் பெருநிகழ்வுகள் நிகழுங்காலத்தே.
இயற்கைக் கூறுகளும் பங்குபெறும் எனக்குறிக்கும் இலக்கிய மரபு
பற்றி. அறந்தலை நிறுத்த வந்த மணம் இதுவாதலின். “ஆர்த்தன
வண்டினம்; ஆர்த்தன வேலை” என்றார். சொற்பொருட்
பின்வருநிலையணி. 93
