கடிமணப் படலம் - 1337

bookmark

நன்மனை புகுதல்

மனைவியுடன் இராமன் மாளிகை புகுதல்
 
1337.    

மற்று உள. செய்வன செய்து. மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி.
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்.
பொற்றொடி கைக்கொடு நல் மனை புக்கான்.
 
மற்றுள    செய்வன  செய்து  -  (இராமன்)  இன்னும்   செய்யத்
தக்கவையான  சடங்குகளையெல்லாம்  செய்து  முடித்து;   மகிழ்ந்தார்
முற்றிய  மாதவர் தாள் முறை சூடி - மகிழ்ச்சியால் திளைத்து நிற்கும்
பெருந்தவம்    முற்றிய    (வசிட்டன்.    விசுவாமித்திரன்    முதலிய)
முனிவர்களின்     திருவடிகளை     முடியில்    சூடுமாறு   பணிந்து;
கொற்றவனைக்  கழல்   கும்பிடலோடும்  -  (தந்தையான)  தசரதச்
சக்கரவர்த்தியின்  பாதங்களில்  வீழ்ந்து  கும்பிட்டவுடன்;  பொற்கொடி
கைக்கொடு  நல்மனை  புக்கான் - பொன்வளைகள் பூண்ட சீதையின்
கைகளைப்   பற்றியவாறு   நல்லனவெல்லாம்  கொண்ட   (தனக்குரிய)
மாளிகையினுள் சென்றான்.

அவதார நோக்கம் நிறைவேறுதற்குரிய ஒரு பெரும்பணி.  முதற்பணி.
எவ்வித  ஊறுமின்றி இனிதே நிறைந்தமை  கொண்டு  முனிவர்  குழாம்
பெருமகிழ்வு   எய்தியது  என்பார்.   “மகிழ்ந்தார்   முற்றிய  மாதவர்”
என்றார்.  மண  மேடையில்.  நுழைந்ததுபோலவே.   அதனை  விட்டுச்
செல்கையிலும்  சான்றோரை மறவாமல்  வணங்குதல்  வேண்டும்  எனும்
மரபை  நினைப்பிப்பார்.  “மாதவர்  தாள்   முறைசூடி.  கொற்றவனைக்
கழல்  கும்பிடலோடும்” என்றார்.  பொற்றொடி -  அன்மொழித்தொகை;
பிராட்டியைக் குறித்தது.                                      92