கடிமணப் படலம் - 1314
இராமபிரான் தானம் செய்தபின் திருத்தேர் ஏறுதல்
இராமன் தேர் ஏறுமுன் தானம் நல்கல்
1314.
பல் பதினாயிரம் பசுவும். பைம் பொனும்.
எல்லை இல் நிலனொடு. மணிகள் யாவையும்.
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான்மறைச்
செல்வர்கள் வழுத்துற. தேர் வந்து ஏறினான்.
பல்பதின் ஆயிரம் பசுவும் பைம் பொன்னும் - (பின்பு)
பத்தாயிரக் கணக்கான பசுக் கூட்டங்களையும் பசும் பொன்னையும்;
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும் - வரம்பில்லாத
நிலங்களையும் நவரத்தினங்களையும்; நல்லவர்க்கு உதவினான் -
நல்லொழுக்கமுடைய அருளாளர்கட்குக் கொடையாகக் கொடுத்தவனாகிய
இராமன்; நவிலும் நான்மறைச் செல்வர்கள் வழுத்துற -
போற்றற்குரிய நான்கு வேதங்களையே தம் செல்வமாக உடைய
அந்தணாளர்கள் வாழ்த்துக்கள் நிறைய; தேர் வந்து ஏறினான் -
தேரில் வந்து ஏறினான்.
கோதானமும். பூதானமும் ஸ்வர்ண தானமும் இரத்தின தானமும்
நல்லோர் மகிழக் கொடுத்து இராமன் தேர் ஏறினன் என்க. நற்பெருஞ்
செயல்கள் புரியப் புகுமுன். கொடை கொடுத்து. நல்லோரை மகிழச்
செய்யும் மரபை மறவாமல் இங்குக் குறித்தார். உதவினான் -
வினையால் அணையும் பெயர். உதவினான் என்பதனை
முற்றெச்சமாகக் கொள்ளின் இராமன் என்னும் (தோன்றா) எழுவாயை
வருவித்துப் பொருள் கூறுக. “அறப்பயன். தக்கார் கைப்பட்டக்கால்
வான் சிறிதாப் போர்த்துவிடும்” (நாலடி. 38) ஆதலால். “நல்லவர்க்கு
உதவினான்” என்றார். 69
