கடிமணப் படலம் - 1315

bookmark

இராமபிரான் ஏறிய தேரின் சிறப்பு (1315-1316)

இராமபிரான் தேர்க் காட்சி
 
1315.    

பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே.
 
பொன்   திரள்   அச்சது  -    பொன்னால்    ஆன  திரண்ட
அச்சினையுடையதும்;  வெள்ளிச்    சில்லி    புக்கு   உற்றது   -
வெள்ளியினால்   ஆன    சக்கரங்கள்   நுழையப்    பொருந்தியதும்;
வயிரத்தின்    உற்ற    தட்டது   -   வச்சிர   மணியால்   ஆன
தட்டினையுடையதும்;  சுற்று  உறு நவமணி சுடரும் தோற்றத்தது   -
சுற்றிலும்    பொருந்திய    நவமணிகளால்    நெடுந்    தொலைவின்
அளவும்  ஒளிவீசும்  காட்சியையுடையதும்  ஆகிய  அந்த இராமபிரான்
ஏறிய தேர்; ஒற்றை  ஆழிக்  கதிர்த் தேரொடு ஒத்ததே - ஒற்றைச்
சக்கரத்தையுடைய சூரியனது தேரொடு ஒத்து விளங்கியது.

சூரியனது     ஒற்றைச்  சக்கரத்  தேர்.   ஒளியாலும்  வேகத்தாலும்
உவமையாயிற்று.   சூரிய   மண்டல   மத்தியில்   சூரிய   நாராயணன்
எழுந்தருளியிருப்பதாலும் உவமையாம் எனினுமாம்.                70