கடிமணப் படலம் - 1308

bookmark

உடைவாள் அணிதல்

1308.    

சலம் வரு தரளமும். தயங்கு நீலமும்.
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்.
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம்வரு கதிர் என. வாளும் வீக்கியே;
 
சலம் வரு தரளமும். தயங்கு நீலமும்- கடல் நீரில் தோன்றுகின்ற
(வெண்)  முத்துக்களும்.  ஒளிகின்ற  நீல  நிறமுடைய  மாணிக்கங்களும்;
அலம்  வரு நிழல்  உமிழ் அம்பொன் கச்சினால் - அசைவதனால்
ஒளி    உமிழ்கின்ற   அழகிய    பொன்னால்     ஆகிய    இடைக்
கச்சினால்; குலம் வரு கனகவான் குன்றை நின்று உடன் வலம் வரு
கதிர் என - சிறப்புடைய பொன்மயமான மேருமலையைச்  சேர  வலம்
வந்து  நிற்கின்ற  சூரியனைப்  போல;  வாளும்  வீக்கியே  -  உடை
வாளினை இடையில் கட்டி (இராமன் அணிசெய்தான்.)

இராமனது    திருமேனி   கரிய   நிறத்தது  ஆயினும்.   அணிந்த
அணிகளின்  ஒளியால்  பொன்னிறம்    பெற்றதாதலின்   இடையினை.
கனகக்  குன்றாகிய  மேரு மலைக்கும்.  உடைவாளினைச்  சூரியனுக்கும்
உவமித்தார். தரளம்: முத்து. கனகம்: பொன்.                     63