கடிமணப் படலம் - 1309
உடைவாளின் பக்கத்தில் குஞ்சங்களைத் தொங்கவிடுதல்
அரைப் பட்டிகை அணிதல்
1309.
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிட.
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என. தொங்கல் நாற்றியே;
முகைவிரி சுடர்ஒளி முத்தின் பத்தி வான் தொகைவிரி
பட்டிகைச் சுடரும் - அரும்பி விரிக்கின்ற ஒளியுடைய முத்துக்களின
வரிசைகள் மிகுந்து இணைந்து விரிகின்ற அரைப்பட்டிகை எனும்
அணியின் ஒளியும்; சுற்றிட. தகை உடைவாள் எனும் தயங்கு
வெய்யவன் - இடையைச் சுற்றி நிற்கையில் கச்சில் பொருந்தியுள்ள
உடை வாள் என்னும் ஒளிமிகு சூரியனின்; நகை இளவெயில் என-
ஒளிர்கின்ற இளவெயில் போலத் தோன்றிடுமாறு.; தொங்கல்
நாற்றியே - தொங்குவதாகிய மணிமாலையை (அந்தவாளின் அருகில்)
தொங்கவிட்டு (இராமன் அணிந்தான்).
உடை வாளைச் சூரியன் என்றதற்கு ஏற்ப. அவ்வாளின் அருகே
தொங்கவிடப்பட்ட செம்மணி மாலையை. அச் சூரியனது இளவெயில்
என்று உருவகித்தார். 64
