கடிமணப் படலம் - 1303
நவமணிமாலை அணிதல்
1303.
தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்.
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்.
மீனொடு சுடர்விட விளங்கும் மேகத்து.
வான் இடு வில் என. வயங்கிக் காட்டவே;
தேன் உடை மலர் மகள்- தேனையுடைய செந்தாமரை மலரில்
வீற்றிருக்கும் திருமகள்; திளைக்கும் மார்பினில் - மகிழ்ந்துறையும்
(திரு) மார்பில்; தான் இடை விளங்கிய தகையின் ஆரம் தான் -
இடையே விளங்குகிற அழகிய (பல்வகை மணிகள் பதித்த)
மாலையானது; மீனொடு சுடர்விட விளங்கும் மேகத்து வான் இடு
வில் என- விண்மீன்களொடு ஒளிர்கின்ற மேகக் கூட்டத்தில் வான்
வில்லும் எழுந்தது போன்று; வயங்கிக் காட்டவே - விளங்கித்
தோன்றுமாறு (இராமன் அணிந்தான்.)
மார்பு கார் மேகத்திற்கும் மணிமாலையின் பல்வகை மணிகள் விண்
மீன்களுக்கும். அவற்றின் ஒளிக்கூட்டம் வான் இடு வில்லிற்கும்
உவமைகள் ஆயின. மேகத்தில் விண்மீன்கள் விளங்கித் தோன்றா;
இங்குத் தோன்றின என்பதால் இல்பொருள் உவமையணி. தான்-
அசைகள். வான் இடுவில்: இந்திரவில். “வானிடு வில்லின் வரவு
அறியா வாய்மையால்” (நாலடி. 1). 58
