கடிமணப் படலம் - 1301

bookmark

முத்துவடங்கள் தரித்தல்

1301.

 கோவையின் பெரு வட முத்தம் கோத்தன.
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ.
‘மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம்’ என.
ஏ வரும் பெருங் குறி இட்ட போன்றவே.
 
முத்தம் கோத்தன  கோவையின்  பெருவடம்   -   முத்துக்கள்
கோக்கப்பட்ட  மூன்று கோவையாலான பெரிய வடங்கள்; காவல் செய்
தடக்கையின் .நடுவண்  காந்துவ  -  உலகைக்  காக்கின்ற இராமனின்
அகன்ற   கரங்களின்    நடுவிடத்தே   அணியப்பட்டு   விளங்குபவை;
‘மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம்’  என -  ‘மூன்று வகைப்பட்ட
உலகிற்கும்  இவனே  முதல்வன் ஆவான் என்று; ஏவரும்  பெருங்குறி
இட்ட போன்றவே - எல்லோரும் இசைந்து பெரியதோர்  அடையாளம்
இட்டாற்போன்றிருந்தன.

மூன்று     வடமாய்ப் பிரிந்தவையாய்த்  தோள்  அணிக்குக்  கீழே
கட்டப்பட்ட முத்துக்குஞ்சங்கள். இராமன்  மூவுலகுக்கும்  நாதன்  என்று
ஒப்பிய    உலக   மக்கள்    அனைவரும்    ஒப்பியதற்கடையாளமாக
அணிவித்த   விருதுச்    சின்னம்    போன்றிருந்தன   என்க.  “ஆம்
முதல்வன்  இவன்  என்று  தன்   தேற்றி   (திருவாய்.  7.9.3)   என்று
நம்மாழ்வாரைத்     தேற்றித்      தெளிவித்துள்ளமையும்     காண்க.
தற்குறிப்பேற்ற  அணி.  பெருமானின் திருவடி  அநுக்கிரக சக்தியாகவும்
திருக்கைகள்     நிக்கிரக     சக்தியாகவும்   விளங்குதலின்   “காவல்
செய்தடக்கை”   என்றார்.    “கைவண்ணம்    அங்குக்    கண்டேன்;
கால்வண்ணம்    இங்குக்    கண்டேன்”   (கம்ப.   475)    என்பதன்
நுண்பொருளும் அது.                                        56