கடிமணப் படலம் - 1302
கடகம் தரித்தல்
1302.
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து. எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி. கற்பகம்
ஈண்டு. தன் கொம்பிடை ஈன்றது ஆம் என.
காண்தகு தடக் கையில் கடகம் மின்னவே;
கற்பகம் - கற்பகத் தருவானது; எதிர்வந்து வேண்டினர்க்கு
உதவுவான் விரும்பி - தன் எதிரில் வந்து விரும்பிக் கேட்பார்க்குக்
கொடுக்க மனங் கொண்டு; மாண்ட பொன் மணி அணிவலயம் -
சிறந்த பொன்னாலும். மணிகளாலும் ஆகிய வளைகளை; ஈண்டு தன்
கொம்பு இடை ஈன்றது ஆம் என - செறிந்த தன் கிளைகளிலே
உண்டாக்கி வைத்தாற் போன்று; காண் தகு தடக்கையில் கடகம்
மின்ன - காணத்தக்க தன் அழகிய அகன்ற கரங்களில் மின்னும்
கடகம் என்னும் அணிகளை (இராமன் அணிந்தான்.)
கற்பகம் இராமனுக்கும். அதன் கொம்புகள் அவன் கரங்களுக்கும்
உவமைகள். கலைஞர்களுக்குக் கடகம் இட்டுச் சிறப்பித்தல் இயல்பு.
அவ்வாறு சிறப்பிக்க. கற்பகத்தரு. இராமன் கரங்களில் கடகங்களை
மாட்டி வைத்திருந்தது என்பதாம். “கற்பகக் கா அன்ன நற்பல
தோளார்க்கு” (திருவாய். 6.6.6.) எனும் நம்மாழ்வார் கருத்தை
அடியொற்றியது. 57
