கடிமணப் படலம் - 1296

bookmark

சுழியம் சூடல்

முடிக்கு அழகு செய்தல்
 
1296.    

மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை.
பொங்கு இருங் கருங் கடல் பூத்தது ஆம் என.
செங்கிடைச் சிகழிகை. செம் பொன் மாலையும்.
தொங்கலும். துயல்வர. சுழியம் சூடியே.
 
மங்கல  முழு நிலா மலர்ந்த திங்கைள - மங்கலப் பொருள்களுள்
ஒன்றான  முழுக் கலைகளும் நிறைந்த முழு நிலாவை;  பொங்கு இருங்
கருங்கடல்  பூத்தது ஆம்  என - அலைகள் பொங்கும் பெரிய கரிய
கடல்   தன்னிடத்தே   பூக்கப்  பெற்றது  போலும்   என்று   உவமை
கூறுமாறு;  செம்கிடை சிகழிகை - செந்நெட்டி மாலையும்; செம்பொன்
மாலையும் - செம்பொன்னாலான மாலையும்; தொங்கலும் துயல் வர -
பூமாலையும்  அசையா  நிற்க;  சுழியும்  சூடியே  -  சுழியம் என்னும்
அணியை முடியில் (இராமன் அணிந்தான்).

“பொங்கு     இருங் கருங்கடல்” -  அலைபோல்  நெளியும்  குழல்
தொகுதிக்கும்.  “முழுநிலாத்  திங்கள்”  அம்முடியில்  அணியப்  பெற்ற.
வயிர   மணிகளாலான   சுழியம்  என்னும்   அணிக்கும்   உவமைகள்
ஆயின. பெருமானின் திருமுடி அலங்காரமே  மணம்  நிகழும்  பங்குனி
யுத்தர  நாளின் தோற்றத்தையுணர்த்தியது என்பார்.  “மங்கல  முழுநிலா
மலர்ந்த  திங்களை”  என்றார். பங்குனி உத்தர  நாள்  முழு நிலவன்றே
வரும்  ஆதலான். சிகழிகை - நெற்றியில்  வட்டமாகக்  குஞ்சங்களுடன்
சூடும்   மாலை.   சுழியம்   -   கொண்டையில்   அதனைக்   கட்டும்
வட்டவடிமான    அணிவகை.   “துளவியல்    தும்பையஞ்    சுழியம்
சூடினான்”  (கம்ப.)   எனவும்.   “செங்கையினில்   பொற்   செண்டும்
திருமுடியில் சுழியமுடன்” (பெரிய  புரா. கழறிற். 112)  எனவும்  வருதல்
காண்க.                                                   51