கடிமணப் படலம் - 1297

bookmark

இருகுழைக் காட்சி

குண்டலம் அணிதல்
 
1297.    

ஏதம் இல் இரு குழை. இரவு. நன் பகல்.
காதல் கண்டு உணர்ந்தன. கதிரும் திங்களும்.
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற.
தூது வந்து உரைப்பன போன்று தோன்றவே.
 
இரவு  நன்பகல் காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும்-
இரவிலும்  நல்ல   பகலிலும்   (சீதை   படுகிற)   காதல்    நோயைக்
கண்கூடாகக்   கண்டு   உணர்ந்தவர்களாகிய   சூரியனும்   சந்திரனும்;
தூதுவந்து  - தூதாக (இராமனிடம்) வந்து;செவியின் உள்உற ;-  சீதை
காதல்  நோயைப்  பிறர்க்கும்  தெரியாவண்ணம்   உரைக்க   வேண்டி
இராமனின்   காதுகளின்   உள்ளே    சென்றடையும்படி;    சீதைதன்
கருத்தினை உரைப்பன  போன்று  - அச்சீதையினது  எண்ணத்தைச்
சொல்பவை  போன்று;  ஏதம் இல்  இருகுழை  தோன்ற - குற்றமற்ற
இரண்டு   குண்டங்களைத்    (தன்   செவிகளில்)  விளங்க   (இராமன்
அணிந்தான்).

“தூது   சென்று” என்னும் பாடத்தினும் “தூது வந்து” எனும் பாடமே
பொருட்   சிறப்புடைமையின்    கொள்ளப்பெற்றது.    குண்டலத்துக்கு
ஒளியாலும்  வட்டவடிவத்தாலும்   சூரிய  சந்திரர்.   உவமையாயினர் -
தற்குறிப்பேற்ற  அணி. இரு  சுடர்களும்  தெய்வமாதலின்.  பிராட்டியின்
உள்ளத்துள்   உள்ளதையுணர்ந்து   வந்து.    பிறர்   அறியாவண்ணம்
இராமன்   திருச்செவிகளில்  ஓதுவது   போல்   இரு  குண்டலங்களும்
செவியில்  நிலவின  என்பதாம்.  சூரியன்.  தன்   வழித்  தோன்றலான
இராமனுக்கு  அந்தரங்கத்  தூதுவனாக  வந்துரைப்பவனாகவும்  சந்திரன்
தன்  வழியினளான  சீதைக்கு        அந்தரங்கத்        தூதுவனாக
வந்துரைப்பவனாகவும்  கொள்க.  அந்தரங்கச்  செய்திகளை  அரசர்க்கு
உரைக்கும் தூதர். இவ்வாறு  செவியுள் ஓதுதல்  வழக்காதலை. “மின்னிற
மருங்குலாய். செவியின் மெல் எனப்  பொன்னிறத் தும்பி  வந்து  ஊதிப்
போயதால்”   (கம்ப.   5105)  எனப்  பிராட்டிக்கு   அனுமன்   தூதாக
வருவதனைக்   கனாவாகக்   கண்டு  சொன்ன   திரிசடை   கூற்றாலும்
உணரலாம்.                                                52