கடிமணப் படலம் - 1291
கவிக் கூற்று
1291.
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற.
விராவின. குவிந்தன. விளம்ப வேண்டுமோ?
அரா - அணை துறந்து போந்து. அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம்அரோ:
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற விராவின;
குவிந்தன - பூவுலகம் முதலான எல்லா உலகத்துள்ளோரும்
(இத்திருமணத்தைக் காண வேண்டும் எனும் ஆசையின் உந்துதலால்)
வந்துகலந்து குவிந்தனர்; விளம்ப வேண்டுமோ? - யாம் இனித்
தனித்தனியாக எடுத்தியம்ப வேண்டுமா? (இல்லையாதலால்); அரா
அணை துறந்து போந்து - ஆதிசேடன் எனும் பாம்பின் படுக்கையை
நீங்கி வந்து; அயோத்தி எய்திய - (மன்பதையைக் காக்க) அயோத்தி
நகரில் அவதரித்துள்ள; இராகவன் செய்கையை விளம்புவாம் -
இராம பிரானது செய்தியை (இனிக்) கூறத் தொடங்குவோம்.
அரோ - அசை. தராதலம்: பூமியாகிய இடம். தள்ளுறல்:
(ஆசையின்) உந்துதல். எல்லா உலகத்தோரும் வந்து குவிதலின்.
இன்னார் இவ்வுலகினர் என எடுத்தியம்பல் இயலாததாயிற்று என்பார்.
“உலகு அனைத்தும் விராவின;குவிந்தன” என்றார். 47
