எழுச்சிப் படலம் - 826
தேரும், யானையும் விளங்குதல்
826.
சில் இடம் உலகு எனச் செறிந்த தேர்கள்தாம்
புல்லிடு சுடர் எனப் பொலிந்த. வேந்தரால்;
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால்.
வில் இடும் முகில் எனப் பொலிந்த. வேழமே.
உலகு சில் இடமென- உலகம் சிறிய இடத்தையுடையது என்று
சொல்லுமாறு; செறிந்த தேர்கள் தாம் - நெருங்கின தேர்கள்;
வேந்தரால் - (தம்மேல் ஏறியுள்ள) மன்னர்களால்; புல்லிடு சுடரென -
பொருந்திய கதிரவனைப் போல; பொலிந்த - விளங்கின; வேழம் -
யானைகள்; எல்லிடு கதிர்மணி - சூரியனின் கதிர்கள் போல
ஒளிவிடும் இரத்தினங்கள்; எறிக்கும் ஓடையால் - இழைத்த முகபடாம்
அணிந்திருப்பதால்; வில் இடும் முகிலென - வானவில் இடப்பட்ட
மேகம்போல; பொலிந்த - விளங்கின.
தேர் மேல் ஏறியுள்ள மன்னவர்க்குத் தேர்மேல் விளங்கும்
சூரியனும். இரத்தினங்கள் இழைத்துச் செய்யப்பட்ட நெற்றிப் பட்டம்
அணிந்த யானைகளுக்கு இந்திர வில்லோடு கூடிய மேகங்களும்
உவமையாகும். தேர் உதயமலையாகவும். வேந்தர்கள் சூரியர்களாகவும்.
யானை முகிலாகவும். ஓடை மின்னலாகவும் உவமை
கொள்ளத்தக்கன. 10
