எழுச்சிப் படலம் - 827

bookmark

குடைகளும்-கொடிகளும்

827.    

கால் விரிந்து எழு குடை. கணக்கு இல் ஓதிமம்.
பால் விரிந்து. இடை இடை பறப்ப போன்றன;
மேல் விரிந்து எழு கொடிப் படலை. விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால்!
 
கால்     விரிந்து- (அச்சேனைகளின்  இடையே  பிடிக்கக் கூடிய)
காம்பிலிருந்து  விரிந்து;  எழுகுடை  - எழுந்துள்ள  வெண் குடைகள்;
கணக்கு  இல்  ஓதிமம்  -  எண்ணில்லாத அன்னப் பறவைகள்; பால்
விரிந்து  -  பால்  போன்ற  தம் வெண் சிறகுகளைப் பரப்பி; விண் -
வானத்தில்; பறப்ப- பறப்பன; போன்றன - போன்றன; மேல் விரிந்து
-  வானத்தில் விரிந்து; எழு கொடிப் படலை - எழுகின்ற கொடிகளின்
கூட்டம்;  விண் எலாம் - விண் முழுவதும்; தோல் உரிந்து - தோல்
உரியப்  பெற்று; உகுவன போன்று - சிந்துவன போன்று; தோன்றும்-
தோன்றும்.

சேனைகளின்     இடையே பல வெண்ணிறக்   குடைகள்  பிடிக்கப்
படுபவை.   பல  அன்னப்  பறவைகள்   தம்முடைய   வெண்மையான
சிறகுகளை  விரித்து  வானத்தில்  பறந்து   போவதையும்.  வெண்கொடி
ஆடுபவை.     வானம்     தோலுரிக்க      அவை      அங்கிருந்து
சிந்துவனவற்றையும் ஒத்துள்ளன என்பார். தற்குறிப்பேற்ற அணி.      11