எழுச்சிப் படலம் - 820

bookmark

தசரதன் வியத்தல்

820.    

வெற்றிவேல் மன்னவன். ‘தக்கன் வேள்வியில்.
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்.
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொல் அன்று இடித்தது. ஈங்கு?’ என்றான்.
 
வெற்றிவேல்    மன்னவன் - வெற்றி பொருந்திய வேலை ஏந்திய
தசரதன்;  கற்றை  வார்  சடைமுடி  -  தொகுதியான  நீண்ட  சடை
முடியையும்;   கணிச்சி   வானவன்   -  மழுப்படையையும்  உடைய
தேவனாகிய   சிவ   பெருமான்;  தக்கன்  வேள்வியில்  -  தக்கனது
யாகத்தை   அழித்த  போது;  ஏழ்  உலகையும் - ஏழு உலகத்தையும்;
முற்றவும்  வென்ற  -  முற்றும்  வெற்றிகண்ட;  மூரிவில்  -  வலிய
வில்லானது; இற்ற  -  முறிந்ததனால்  உண்டான;  பேரொலிகொல் -
பெரிய  ஓசையோ;  அன்று  -  அன்றைய தினம்; ஈங்கு இடித்தது -
இங்கே இடித்தது; என்றான் - என்று வியந்து கூறினான்.

வெற்றிவேல்   - உடையவனது  தன்மை உடைமைப் பொருள் மேல்
ஏற்றப் பெற்றது. தக்கன் வேள்விக்கு வந்த.  வானுலகில்  வாழும் சிறந்த
தேவர்களின்  வலிமைக்கும்  விஞ்சியது   ஆதலின்  அவ்   வில்லுக்கு
‘முற்ற ஏழுலகையும் வென்ற’ என்ற அடைமொழி? தந்தார்.          5