எழுச்சிப் படலம் - 819

bookmark

இராமன் வீரங்கேட்ட தயரதன் மகிழ்ச்சி

819.    

இலை முகப் படத்து அவன் எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில் செவியில் சார்தலும்.
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட.
மலை என வளர்ந்தன. வயிரத் தோள்களே.
 
இலைமுகப்    படத்து- பனையோலையின் முகப்பாகிய  படத்தில்;
அவன்  எழுதிக்  காட்டிய - அச் சனக மன்னன் எழுதிக் காண்பித்த;
தலைமகன்  சிலைத் தொழில் - (தன்) மூத்த மைந்தனாகிய இராமனது
வில்லாற்றலானது;  செவியில்  சார்தலும் - (தன்) காதில் பட்டவுடனே;
வயிரத்  தோள்கள்  -  (தசரதனுடைய)  வயிரம்  போன்ற உறுதியான
தோள்கள்;   நிலைமுக   வலையங்கள்  -  தம்மிடம்  நிலை  பெற்ற
தோள்வளைகள்;  நிமிர்ந்து நீங்கிட - வாய்விட்டுக் கழன்றுபோகும்படி;
மலை என வளர்ந்தன - மலைபோலப் பூரித்தன.

தன்     மூத்த மைந்தனான இராமனது  வீரச்  செயலை  வேறொரு
மன்னன்  புகழ்ந்து எழுதியதைக்  கேட்டுத்  தசரதன்  மகிழ்ச்சியடைந்து
தோள் பூரித்தான் என்பது.                                    4