எழுச்சிப் படலம் - 817

bookmark

தூதர்கள் தசரதனை வணங்குதல்

817.    

முகந்தனர் திருவருள். முறையின் எய்தினார்;
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது. செல்வனைப்
புகழ்ந்தனர்; ‘அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது’ என. நெடிது கூறினார்.
 
திருவருள்  முகந்தனர்- (வாயிலையடைந்த தூதர்)  உள்ளே செல்ல
அரசனது   அருளைப்பெற்றவராய்;    முறையின்     எய்தினார்  -
அரசவையில்  செல்ல  வேண்டிய முறைப்படி அரசன்  முன்பு   சென்று;
திகழ்ந்து ஒளிர் - மிக விளங்குகின்ற; கழல் இணை தொழுது - தசரத
மன்னனின்   அடிகளை   வணங்கி;   செல்வனைப்  புகழ்ந்தனர்  -
அவ்வரசனைப்  புகழ்ந்து;  அரச  - மன்னரே; நின்  புதல்வர் - உன்
மைந்தர்; போய பின் - (விசுவாமித்திரனுடன்) இங்கிருந்து   சென்றபின்;
நிகழ்ந்ததை  - நடந்த செயல்; இது என - இதுவாகும் என்று; நெடிது
கூறினார் - விரிவாகக் கூறினர்.

அரசவைக்கு     அன்னிய நாட்டுத் தூதுவர்  வருங்காலத்து வாயில்
காப்பவர்  ‘அரசனிடம்  சென்று  இந்த நாட்டுத் தூதுவர்  வந்துள்ளார்’
என்று உணர்த்தி. அவனது  உத்தரவின்படி  உள்ளே விடுதல் மரபாகும்.
முறை:  அரசவையில்   செல்லும்   தூதர்கள்  அடக்கத்துடன்  நிற்கும்
முறைமையை    உணர்த்தியது.    செல்வனைப்   புகழ்தல்:  தூதர்கள்
அரசனை வணங்கி எழுந்ததும் அவனைப்புகழ்தல் மரபாகும்.        2