எதிர்கொள் படலம் - 1145

bookmark

இராமன் மிதிலைநகர் வீதியிற் சேறல்

மிதிலை நகர வீதிக்கு இராமன் வருகை
 
1145.    

பஞ்சி சூழ் மெல் அடிப்
   பாவைமார் பண்ணைசூழ்.
மஞ்சு சூழ் நெடிய
   மாளிகையின் வந்து. இடை விராய்.
நஞ்சு சூழ் விழிகள் பூ
   மழையின் மேல் விழ நடந்து.
இஞ்சி சூழ் மிதிலை மா
   வீதி சென்று எய்தினான்.
 
பஞ்சி சூழ்மெல்லடிப் பாவைமார் பண்ணை- செம்பஞ்சுக் குழம்பு
ஊட்டப்பட்ட     மென்மையான     பாதங்களையுடைய      சித்திரப்
பாவையினையொத்த   மகளிரின்   கூட்டம்;   சூழ்  மஞ்சுசூழ்நெடிய
மாளிகையின் வந்து  இடைவிராய் - (வானில்) சுற்றியுள்ள மேகங்கள்.
நீண்ட  மாளிகையில்  வந்து தங்குமாறு உயர்ந்த   (மாடங்களையுடைய)
மாளிகைகளிலிருந்து  (வெளி)  யிடங்களில்  வந்து (மகளிரோடு மகளிர்)
கலந்து  நிற்க;  நஞ்சுசூழ்  விழிகள்  -  நஞ்சு  போன்ற அவர்களின்
கண்கள்;  பூமழையின்  மேல்விழ நடந்து - மலர்  மாரிபோல்  (தன்)
மேலே   விழும்படி.  சென்று; இஞ்சிசூழ் மிதிலைமா  வீதி  சென்று
எய்தினான்    -    மதில்கள்   சூழ்ந்த   மிதிலை   நகரின்  பெரிய
வீதிகளை (இராமன்) அடைந்தான்.

நஞ்சும்     மலராக்க வல்ல நாயகன்  இராமன் என்க. மகளிர். கண்
அம்பு  மழையோடு. அவர் சொரிந்த   கடிமலர் மழையும் இராமன்மேல்
இடையீடின்றி  வீழ்ந்தன  என்க.  உயர்குடி   மகளிராதலின்.   வீதிக்கு
வாராமல்  மாளிகை  மேலிருந்து  மலர்மழையும்.  விழிவீச்சு   மழையும்
பெய்தனர் எனினுமாம்.                                      32