எதிர்கொள் படலம் - 1143

bookmark

அப்போது சேனை அடைந்த மகிழ்ச்சி

1143.    

காதலோ! அறிகிலம். கரிகளைப் பொருவினார்;
தீது இலா உவகையும். சிறிதுஅரோ? பெரிதுஅரோ?
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்.
தாதையோடு ஒத்தது. அத் தானையின் தன்மையே!
 
கரிகளைப்   பொருவினார்  -  யானைகளைப்  போன்ற அப்படை
வீரர்களுடைய;   காதலோ   அறிகிலம்  -  (அரச  குமாரர்களிடத்து
வைத்துள்ள)   அன்பின்   மிகுதியோ     (இவ்வளவென்று)   எம்மால்
அறியமுடியாததாய்  உள்ளது;   தீது  இலா  உவகையும்  சிறிதரோ?
பெரிதரோ?  -  (அவர்கட்கு அப்போது உண்டான) மாசற்ற மகிழ்ச்சிப்
பெருக்கு   குறுகிய   காலத்ததா?  நீண்ட  காலத்ததா?   (அறியோம்.);
கோதை சூழ் குஞ்சிக் குமரர் வந்து எய்தலும் - மாலைகளைச் சூடிய
மயிர்  முடியோடு  காணப்பெறும்  அரசகுமாரர்கள்  வந்து   அடைந்த
அளவிலே; அத்தானையின் தன்மை தாதை யோடு ஒத்தது - அந்தப்
படையின்  இயல்பு  (இராம  இலக்குவர்களைக்  கண்ட) தந்தையாகிய
தசரதன் இயல்போடு சமமாகியது.

அரோ    - அசைகள்: “தாதையோடு ஒத்தது” என்றதனால். தசரதன்
அடைந்த   பேருவகையினைப்   படைகளும்  அடைந்தன    என்றார்.
எனவே.   இராம  இலக்குவர்  அத்தனை  பேர்க்கும்    மக்களாயினர்;
அத்தனை   பேரும்   இராம  இலக்குவர்க்குத்  தந்தையர்    ஆயினர்
என்பது கருத்தாகக் கொள்க.                                  30