எதிர்கொள் படலம் - 1144
இராமன் தேர்மீதேறிச் செல்லுதல்
இராமனும் தம்பியரும் சென்ற காட்சி
1144.
தொழுது இரண்டு அருகும். அன்புடைய
தம்பியர் தொடர்ந்து.
அழிவு இல் சிந்தையின் உவந்து.
ஆடல் மாமிசை வர.
தழுவு சங்குடன் நெடும்
பணை தழங்கிட. எழுந்து.
எழுத அருந் தகையது ஓர்
தேரின்மேல் ஏகினான்.
இரண்டு அருகும் அன்புடைய தம்பியர் தொழுது தொடர்ந்து-
(தனது) இருமருங்கிலும் அன்புடைய தம்பியர் மூவரும் வணங்கி
தொடர்ந்து; அழிவில் சிந்தையின் உவந்து ஆடல் மா மிசை வர-
(என்றும் தமையன் மாட்டு) நிலைத்த அன்புடைய மனத்திலே
பெருமகிழ்ச்சி கொண்டவராய் வெற்றிக் குதிரைகளின்மேலே
ஏறிவரவும்; தழுவு சங்குடன் நெடும்பணை தழங்கிட - (கைகளால்)
தழுவி (வாயில்) வைத்து ஊதப்படுகிற பெரிய சங்கவாத்தியங்களுடன்
பெரிய பேரிகைகள் முழங்கவும்; எழுந்து எழுதருந்தகையது ஓர்
தேரின்மேல் ஏகினான் - (இராமபிரான்) புறப்பட்டு. ஓவியத்தாலும்
எழுதுதற்கரிய அழகுடையதொரு தேரின்மேல் (ஏறிச்) சென்றான்.
இராமன் மாட்டுத் தம்பியர் வைத்துள்ள அழியா அன்பின்
ஆழத்தையும் கனத்தையும் முதல் இரண்டடிகளிலும் சொல்
ஓவியப்படுத்தியுள்ளமை காண்க. மெய்காப்பார் பணியினை இராமன்
மாட்டுள்ள அன்பின் மிகுதியால் தம்பியரே ஏற்று. இருமருங்கும்
புடைசூழவந்தனர் என்க. இத்தகைய பவனிக்கெனப் பயிற்றப் பட்ட
ஆடும் பரிகள் இருந்தன என்பது. “ஆடல்மா பிசைவர” என்பதனால்
பெற்றாம். 31
