எதிர்கொள் படலம் - 1124
குடைகளும் அணிகலங்களும்
1124.
மன் நெடுங் குடை மிடைந்து
அடைய வான் மறைதர.
துன்னிடும் நிழல் வழங்கு இருள்
துரப்பு எளிதுஅரோ-
பொன் இடும். பூண் இடும்.
புனை மணிக் கலன் எலாம்
மின் இடும்; வில் இடும்;
வெயில் இடும்; நிலவு இடும்!
மன்நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறை தர- அந்தச்
சேனையில் மன்னர்களின் நீண்டகுடைகள் நெருங்கி. (அதனால்)
வானம் முழுவதும் மறைபட; துன்னிடும் நிழல் வழங்கு இருள்துரப்பு
எளிது - (அங்கு) நிறைந்த நிழலானது தருகின்ற இருட்டை ஓட்டுவது
எளியதேயாம்; பொன் இடும் பூண்இடும் புனைமணிக் கலன் எலாம்
மின் இடும் - (எங்ஙனமெனில்) பொன்னால் செய்யப்பட்ட அணிகளை
இட்டு (அதன் மேல்) அழகிய மணிகளைப் பதித்த (அச்சேனையினர்)
ஆபரணங்கள் எல்லாம் மின்னலைப்போல் ஒளிவிடும்; வில்இடும் -
பன்னிற மணிகள் (தம்) ஒளிவீச்சால் வானவில் போல் பலநிற ஒளிகள்
சிந்தும்; வெயில் இடும் - (சில மணியாபரணங்கள்) கதிரவனின் வெப்ப
ஒளியை வீசும்; நிலவு இடும் - (சில மணியணிகள்) சந்திரனின்
குளிர்ந்த ஒளிகளை உமிழும்.
‘புவியிடும் “எனும் பாடத்திலும்” பூண் இடும்” எனும் பாடம்
பொருட்சிறப்புடையது. இறுதியிரண்டடிகள் உயர் கவிகளுக்கேயுரிய
சொல் இன்பச்சுவை பிலிற்றி நிற்றலை ஓதி யுணர்க. படையின் செலல்.
இருள் நீங்கி ஒளிமிகுவதை “எரிந்தெழுபல் படை”(கம்ப: 8329) எனும்
பாடலிலும் உரைப்பார். 11
