எதிர்கொள் படலம் - 1125

bookmark

சனகன் எதிர்கொளவரும் வழியின் காட்சி

சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சி
 
1125.    

தா இல் மன்னவர்பிரான் வர. முரண் சனகனாம்
ஏ வரும் சிலையினான். எதிர் வரும் நெறி எலாம்.
தூவு தண் சுண்ணமும். கனக நுண் தூளியும்.
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடிஎலாம். 
 
தாஇல்     மன்னவர் பிரான் வர-  குற்றமில்லாத   மன்னர்க்கு
மன்னனான     தசரதச்     சக்கரவர்த்தி.     தனது      நகரத்திற்கு
வருகைபுரிகையில்; முரண் சனகனாம் ஏவரும் சிலையினான்- வலிமை
மிகும்  சனகனாகிய  அரிய அம்புகள் தொடுக்கவல்ல  வில்  வீரனாகிய
அரசன்;  எதிர்வரும்  நெறிஎலாம் -  எதிர்  கொண்டு அழைத்துவர
உள்ள வழிகள் முழுவதும்;தூவுதண் சுண்ணமும் கனக நுண் தூளியும்
-   மங்கல  நிகழ்ச்சிகளில்  மேலே  தூவப்படுகிற   குளிர்ச்சி   தரும்
வாசனைப்   பொடிகளும்  (அணிகளின்   உராய்வினால்)   சிந்துகின்ற)
பொன்னாபரணங்களின்  நுட்பமான பொற் பொடிகளும்;  பூவின் மென்
தாது   உகும்  பொடியுமே  -  மலர்களிலிருந்து  சிந்துகிற மெல்லிய
மகரந்தப்  பொடிகளும்  ஆகிய  இவையே; பொடி  எலாம் - (அங்குச்
சிந்திய) பல்வகைத் தூசுகள் ஆகும்.

உலகில்.    எளியவையே தூசு எனப்பட. அங்கு மதிப்பு மிக்கவையே
தூசுகள் ஆயின என்க. தா இல் - குற்றமற்ற;கேடு  அற்ற  எனினுமாம்.
“தாவா  விழுப்புகழ்ப்  பூவை  நிலையும்”  (தொல். புறத். 5) இரப்போர்
கடலை  ஈந்தே  கடந்து  (கம்ப.  172).   மண்ணின்மேல்   வான் புகழ்
நாட்டான்   ஆதலின்.   தசரதனை.    “தா  இல்   மன்னவர்  பிரான்
வர”எனறார்.                                               12