எதிர்கொள் படலம் - 1123

bookmark

சேனை எழுப்பிய தூளி

1123.    

சூழு மா கடல்களும் திடர் பட. துகள் தவழ்ந்து.
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிதுஅரோ-
ஆழியான் உலகு அளந்த அன்று. தாள சென்ற அப்
பூழையூடே பொடித்து. அப்புறம் போயதே!
 
துகள்    - (அச்சேனையின் இயக்கத்தால் எழுந்த) புழுதி; சூழும்மா
கடல்  எலாம்  திடர்பட  - (உலகைச்) சூழ்ந்துள்ள கடலகள் எல்லாம்
மேடாகும்படி; தவழ்ந்து ஏழு பாரகமும் உற்று உளது எனற்கு எளிது
- பரவிச்  சென்று.  மேல்  ஏழ்  உலகத்திலும் போய்ப் பரவியது என்று
சொல்லுதற்கு  (வழி)  (மிக)  எளிதேயாம்;  ஆழியான் உலகு அளந்த
அன்று  -  (எங்ஙனம்  எனில்)  சக்கரப்  படையையுடைய   திருமால்.
உலகங்களை  அளந்த அக்காலத்தில்; தாள் சென்ற அப்பூழையோடே
பொடித்து  -  (அவனது) திருவடி என்று  (மேலே துளைத்துச்)  சென்ற
அந்த (அண்டகடாகத்து மேல் முகட்டுத்)  துளைவழியினூடே  நுழைந்து
சென்று;  அப்புறம்  போயது -  (இவ் வண்டத்துக்கு வெளியே உள்ள)
அவ்வண்டத்திலும் (அத்தூளி) பரவிற்று.

ஆழியான்   திருவடிகள் உலகளந்த அன்று உண்டாக்கிய துளையின்
வழியால்  படையால்  எழுந்த  புழுதி   வெளியண்டத்திலும்   பரவுதல்
எளிதாயிற்று   என்க.   இன்றேல்.   இவ்வுலகம்   புழுதி   மிகுதியால்
திக்குமுக்காடியிருக்கும்  என்பது  கருத்து. அண்ட  கடாகத்திலும்  தூளி
பரவிற்று   என்றதனால்.  இவ்  வேழ்  உலகில்  பரவியமை   சொல்ல
வேண்டா  ஆயிற்று.  அரோ  - அசை. உயர்வு  நவிற்சியணி. பூழை -
சிறுதுளை.                                                 10