எதிர்கொள் படலம் - 1120

bookmark

சேனை தாமரைக் குளத்தை ஒத்தமை

1120.    

தொங்கல். வெண்குடை. தொகைப் பிச்சம். உட்பட விராய்.
எங்கும் விண் புதைதரப் பகல் மறைந்து. இருள் எழ.
பங்கயம். செய்யவும். வெளியவும். பலபடத்
தங்கு தாமரையுடைத் தானமே போலுமே.
 
தொங்கல்   வெண்குடை தொகைப்பிச்சம்  உட்பட  விராய் -
மாலைகளையுடைய  வெண் கொற்றக் குடைகளும்.  தொகுதியான  மயிற்
பீலிக்  குஞ்சங்களும் உட்பட (தாமரை. கொடி.  மகரதோரணம்  முதலிய
அரச  சின்னங்கள்)  கலந்து;  எங்கும்  விண்புதைதர  -  (அதனால்)
எவ்விடத்தும்  ஆகாயம்  மறைவதனால்; பகல் மறைந்து இருள் எழ -
சூரியன்   ஒளி   மறைந்து  இருள்  உண்டாக;  பங்கயம்  செய்யவும்
வெளியவும்  - தாமரை மலர்கள் செம்மையாகவும்.  வெண்மையாகவும்;
பலபடத்தங்கு  தாமரையுடைத்தானமே  போலும்  -  பலப்பலவாகத்
தோன்றும் தாமரைத் தடாகத்தையே அச் சேனை ஒத்திருந்தது.

வானம்     முழுவதும் அரச சின்னங்கள் மறைப்பதாகக்   கற்பித்து.
அதன்  பின்னும்  கற்பனைக் கண்ணைச் செலுத்தி  பகலை   இரவாக்கி.
உலகைத்   தாமரைத்   தடாகமாகக்   கொண்டு   மகிழும்  கவிஞரின்
கற்பனைத்  திறம் நினைக்க  இனிக்கவல்லது.  சேனையில்  வெண்ணிறக்
குடைகளும்.   அவற்றில்   செந்நிறமாகத்   தொங்கும்    குஞ்சங்களும்
நிறைந்த  காட்சி  வெண்டாமரையும்  செந்தாமரையும் கலந்து   மலரும்
தாமரைக்  குளம்  போன்றிருந்தது  என்பதாம்.  குடைகளால்  கதிரவன்
மறைந்து பகல் இருளாவதை மேலும் (கம்ப. 786. 8411) குறிப்பர்.      7