எதிர்கொள் படலம் - 1121
எங்கும் திருமகளின் விளக்கம்
1121.
கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் - முளரியாள்.
முளரியாள் - செந்தாமரை மலரில் வதியும் திருமகள்; பகர்
மடிஇலா அரசினான் - (புகழ்ந்து) கூறப்படுகிற சோம்பல் இல்லாத
அரசாட்சி செய்யும் தசரத மன்னனுடைய; கொடி உளாளோ -
கொடியில் உள்ளாளோ?; தனிக் குடை உளாளோ? - ஒப்பற்ற வெண்
கொற்றக் குடையிலே இருக்கின்றாளோ; குலப்படி உளாளோ -
பரம்பரை பரம்பரையாக வருகின்ற அவனது இராச்சியத்தில்
இருக்கின்றாளோ; கடல் படை உளாளோ? - கடல் போன்ற அவன்
சேனையிலே இருக்கின்றாளோ?; மார்பு உளாளோ? - அம் மன்னர்
மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ?; வளர் முடி உளாளோ? -
அழகு வளரும் அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ?; தெரிந்து
உணர்கிலாம் - திருமகள் இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக்
கூடவில்லை.
மன்னர்களிடம் திருமகள் வாசம் புரியத்தக்க இவையனைத்திலும்
ஏதோ ஓரிடத்தில் வசிப்பது அவள் வழக்கம்; தரசதன் ஆட்சியில்
அவள் அனைத்திலும் உள்ளாள் என்றவாறு. “மடியிலான் தாள்
உளாள் தாமரையினாள்” (திருக். 617) எனும் அருமைத் திருக்குறளின்
கவிதை விளக்க வுரையாவது இது. 8
