எதிர்கொள் படலம் - 1117

bookmark

சனகன் தயரதனை வரவேற்க எழுதல்

தயரதனைச் சனகன் எதிர்கௌ வருதல்
 
1117.

‘வந்தனன் அரசன்’ என்ன.
   மனத்து எழும் உவகை பொங்க.
கந்து அடு களிறும். தேரும்.
   கலின மாக் கடலும். சூழ
சந்திரன் இரவிதன்னைச்
   சார்வது ஓர் தன்மை தோன்ற.
இந்திரதிருவன் தன்னை
   எதிர் கொள்வான் எழுந்து வந்தான்.
 
வந்தனன்     அரசன் என்ன- தசரத மன்னன்  வந்தனன் என்ற
(செய்தி  கேட்ட  சனக  மன்னன்); மனத்து எழும் உவகை பொங்க -
தன்   உள்ளத்தில்   எழுந்த   உவகை.   உடலில்    (மெய்ப்பாடாய்)
பெருகாநிற்க;  கந்து அடுகளிறும் தேரும் கலினமாக் கடலும் சூழ -
கட்டுத்  தறிகளை முறிக்கவல்ல ஆண்யானைகளும்.   தேர்ப்படைகளும்.
கடிவாளம்  இட்ட குதிரைகளும் ஆகிய சேனைகள்  சமுத்திரம்  போல்
தன்னைச் சுற்றிவர;  சந்திரன் இரவிதன்னைச்  சார்வதோர் தன்மை
தோன்ற  -  சந்திரன்  சூரியனை வந்தடைகின்ற தன்மையினை  ஒப்ப;
இந்திர திருவன் தன்னை எதிர்  கொள்வான்  எழுந்து வந்தான்-
தேவேந்திர       உலகத்தின்       செல்வங்களைப்        போன்ற
செல்வங்களையுடைய    தசரதனை.    எதிர்கொண்டு      அழைக்கும்
பொருட்டுப் புறப்பட்டு வந்தான்.

சூரிய     குலததுத் தசரதனை. சந்திர குலத்துச்  சனகன் வரவேற்க
வருகின்றான்   ஆதலின்.   “சந்திரன்   இரவிதன்னைச்   சார்வதோர்
தன்மை  தோன்ற”  என  அழகுறக்  கூறினார்.  தசரதனை  “இந்திரன்
என” (கம்ப. 318) முன்னும் உவமிப்பார்.                         4