உலாவியற் படலம் - 1182
ஒருத்தி இராமனைப் படுகொலையான் எனல்
1182.
‘மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்
கருணை என்பது கண்டு அறியான்; பெரும்
பருணிதன்கொல்? படு கொலையான்!’ என்றாள்.
மருள் மயங்கு மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்-
‘இராமன் (ஆகிய இவன் எது கேட்டாலும் தரவுள்ள) மோக மயக்கில்
உள்ள மகளிர் எவரிடத்திருந்தும் ஒரு பொருளையும்
விரும்பாதவனாய்; இவன் போகின்றதே! - இவன் இப்படிப்
போகின்றானே! (இது தகுமா?); கருணை என்பது கண்டறியான் -
(இவன்) அருள் என்னும் (பெருங்) குணத்தின் தன்மையைச் (சிறிதும்)
அனுபவித்து அறியானோ?; பெரும் பருணிதன்கொல்? - (மகளிரைச்
சிறிதும் விரும்பாக் குணம்) பரிணமித்த சிறந்த ஞானியோ?;
படுகொலையான் என்றாள் - (ஞானி மணந்து கொள்ளச் செல்லான்)
ஆதலின் (இவன் பெண்களைக் கொல்லும்) படுகொளையாளனே
ஆகல் வேண்டும் என்றாள் ஒருத்தி.
பருணிதன்: குணங்கள் பரிணமித்த பக்குவ ஞானி. புன்னகை.
கடைக்கண் வீச்சு முதலியவை மங்கையர் மாட்டு ஆடவர்க்குக்
கிடைக்கும் பொருள்கள். இராமன் இத்தகைய எந்தப் பொருளையும்
மகளிரிடத்துப் பெற விரும்பாமல் செல்கின்றானே என்பாள்.
“மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்; போகின்றதே! என
வியந்தாள். விருப்பு வெறுப்பு ஆகியவற்றையெல்லாம் இந்த இளம்
வயதிலேயே வென்றுவிட்ட பக்குவ ஞானி போலும் இவன் என்பாள்
“பருணிதன் கொல்!” என்று மேலும் வியந்தாள். 35
