உலாவியற் படலம் - 1183

bookmark

ஒருத்தி தளர்ந்து ஓய்தல்

1183.    

தொய்யில் வெய்ய முலை. துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல். ஓர் நங்கைதான்.
கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்.
‘உய்யும். உய்யும்!’ எனத் தளர்ந்து ஓய்வுற்றாள்.
 
தொய்யில்    வெய்யமுலை- சந்தனத்தால் எழுதிய கோலத்தைக்
கொண்டும்  வெப்பம்  உடைய  தனங்களையும்;  துடி போல் இடை -
உடுக்கை போன்று இடை;நையும் நொய்ய மருங்குல்  ஒர்    நங்கை
தான்  -   இடையே    சிறுத்து இருமருங்கும் பெருத்து மென்மையான
இடையினையும்  உடையாள் ஒருத்தி; கையும் மெய்யும் அறிந்திலள் -
(இராம    வேட்கையால்)    தன்    ஒழுக்க    நிலையையும்   உடல்
நிலையினையும்  உணராதவளாய்;   கண்டவர் உய்யும் உய்யும் எனத்
தளர்ந்து  ஓய்வுற்றாள் -  அவள்   நிலையைக்  கண்டவர்கள் இவள்
பிழைப்பாளோ  ‘பிழைத்துக்  கொள்வாள்’    என  (ஒருவருக்கொருவர்
தம்முள்  ஐயுற்றுப் பேசும்படி)  உடலும் உள்ளமும்  சோர்ந்து  தளர்ந்து
கிடந்தாள்.

தொய்யில்:     மணப்பொருள்களால் மார்பில் எழுதப்படும் கோலம்.
கை: ஒழுக்கம். உய்யும்  உய்யும்?  என்பதை வினாவாக்கி இவள் இனிப்
பிழைப்பாளோ  என்று  வினவிக்  கொண்டனர்  எனினுமாம். அவர்கள்
அவ்வாறு  எண்ணியமைக்குக்  காரணம் கூறுவார்.  “தொய்யில் வெய்ய
முலை.   துடிபோல்  இடை  நையும்  நொய்ய   மருங்குல்”  என்றார்.
தனமோ    கனத்தது.   அதன்   மேல்   தொய்யில்     கனத்தையும்
சேர்ப்பார்களோ? என்பார். “தொய்யில் வெய்ய முலை” என்றார்.    36